பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும். .
மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக “அண்ணாமலைக்கு அரோஹரா’ எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.
தீபத் திருநாளன்று மலையடிவாரத்தில் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படுவது-பரணி தீபம், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் ஏற்றப்படுவது மகாதீபம். மகாதீபத்துக்கு 200 கிலோ நெய், 1 டன் திரி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. மகாதீபத்துக்கான வெண்கலக் கொப்பரை, கி.பி. 1745-ஆம் ஆண்டு, மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதிராயனால் வழங்கப்பட்டது. மலை மேல் தீபம் ஏற்ற உரிடை பெற்றவர்கள் பர்வத ராஜ குலம் எனப்படும் மீனவ குலத்தவர். ஆலயத்தின் தீப தரிசன மண்டபத்தில், பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருள, அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்துடன் மகாதீபம் ஏற்றப்படும். இம்மலையின் மிக முக்கிய சிறப்பு இங்கு ஏற்றப்படும் கார்த்திகை தீபத் திருவிழா.
ஒவ்வொரு வருட அருணாசல கார்த்திகைத் தீபத்திலும் எண்ணற்ற வகையான ஈஸ்வர ஜோதிக் கிரணங்கள் தோன்றுகின்றன. ஆதிமுதல் காண இயலா அண்ணாமலையில்தான், அடி முதல் காண இயலா மஹாபிரபு சர்வேஸ்வரன், நம் மானுட அறிவு மற்றும் அறிவுக்குப் புலனாகும் வகையில், அருணாசல தீபமாக ஆண்டு தோறும் கார்த்திகைத் திருநாளில் காட்சி தருகின்றார். கோடானுகோடி யுகங்களில் தோன்றிய அருணாசல ஜோதிகள் யாவும் கிரிவலப் பாதையில்தாம் பரவி நிறைந்துள்ளன. கிருத யுகம் முதல் கலியுகம் வரை பல்வேறு பிறவிகளைப் பெற்று வாழ்ந்தோர், இங்கு திருஅண்ணாமலையில் அருணாசல மலையைக் கிரிவலம் வருகையில் தங்கள் பூர்வ ஜென்ம வினைகளின் செயற்கழிவிற்கான எளிய வழிமுறைகளைப் பெறுகின்றனர். அருணாசல ஜோதியின் ஒவ்வொரு ஜோதிக் கற்றையும் விதவிதமான பலன்களைத் தாங்கி வருவதாகும். ஒவ்வொரு அருணாசல தீபக் கதிரிலுமே கோடானு கோடி வகையில் அதியற்புதமான பலன்கள் பொதிந்து இருக்கின்றன. உத்தமமான பிரார்த்தனைகளை நாம் அருணாசல தீபத்திடம் வைத்தால், தீப ஜோதி அனுக்கிரக தேவதைகளும் உத்தமமான பலன்களை அள்ளித் தருகின்றன.
உண்மையில், அருணாசல ஜோதியை ஆற்றுவிக்கும் தீபத்தின் ஒரு சிறிய திரி இழையில் தோன்றும் அருணாசல தீப ஜோதிக் கிரணங்களும் யாங்கணும் பரவி, விரவி, பல்கிப் பெருகி சந்ததி சந்ததியாய் நல்வரங்களை வர்ஷிக்க வல்லதெனில் என்னே இதன் மஹிமை! எனவே, இனியேனும் ஆண்டுதோறும் பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக, ஆண்டு தோறும் குறித்த நற்காரியங்களை ஆற்றிட, தக்க இறைச் சங்கல்பங்களை எடுத்துக் கொண்டு நற்செயல்களை ஆற்றி வருவதுடன், வருடம் தோறும், அருணாசல தீப ஜோதிக்காகத் தைலம், எண்ணெய், கற்பூரம், திரி, பசு நெய் ஆகிய ஐந்தையும் அவரவர் வசதிக்கேற்ற அளவில் தானம் அளித்தலால், ஒரு சிறிய இழையில் எழும் தீப ஜோதிக் கிரண அருளமுதமானது, தத்தம் சந்ததிகளுக்கும், மூதாதையர்களுக்கும் எண்ணற்ற பலாபலன்களைக் கொழித்துச் செழித்துத் தருவதாகும். அருணாசலத் தீப ஜோதி தோன்றும் அற்புதத் திருநாளில், அவரவர் மன எண்ணங்களின் பதிவு மேற்கண்ட தீபப் பொருட்களில் பதிந்து, எண்ணங்களை, ஏக்கங்களை, ஆசைகளை முறைப்படுத்தி, கிரக, கோசார, கோள தசமஹா பலாபலன்களை நன்முறையில் நிலை நிறுத்தி ஜீவன்களுக்கு உதவிட, அருணாசல தீபம் துணை புரிய வேண்டி ஜோதிப் பிரகாச வள்ளலாம் சிவபெருமானை வேண்டித் துதித்திடுவோம். அருணாசல தீபம் நாம் பூகோளப் பூர்வமாக எண்ணுவது போல, அருணையைச் சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு மட்டும் தெரிவதல்ல. குறித்த கோணத்தில் இருந்து அனைத்து நாடுகளிலும், அண்ட சராசரக் கோளங்களிலும், நட்சத்திரங்களிலும் காண வல்லதே அருணாசல தீப ஜோதி. எனவே, இந்த அருணாசல தீப ஜோதி தோன்றும் நாளில், இயன்ற தான தர்மங்களைச் செய்து, தான தர்மத்தில் சாசுவதமாகப் பொலியும் ஜோதிப் பிரகாசத்தை நிரவி, நல் எண்ண சக்திகளை விருத்தி செய்து, உண்மையாகவே தியானம் பயில்வோருக்கு, சத்குருவே எங்கிருந்தும் இறையருளால் அருணாசல ஜோதிக் கிரணங்கள் மூலமாக ஆசி ஜோதிகளை அருள்கின்றார்.
பதினாறு விதமான பலன்களைத் தருகின்ற தீப ஜோதி. பரவெளித் திசைகள் எட்டு, உள்மனத் திசைகள் எட்டாக, பதினாறு திசைகளில் இருந்தும் மனிதனுக்கு வரும் துன்பங்களைத் தீர்க்க உதவுபவையே ஷோடச அனுக்ரஹ ஜோதி.
அஷ்டோத்திர மாலா ஜோதி என்கின்ற கார்த்திகை தீப ஜோதியில், 108 வகையான அனுக்கிரக ஜோதிகள் உண்டு. சாதாரண பாமரர் முதல் நாட்டுத் தலைவர்கள் வரை அனைவருக்கும் அருள வல்ல ஜோதி இது. “மக்கள் செய்வது மன்னன் தலையில்” என்பதாக, குடிமக்கள் ஆற்றுகின்ற செயல்களின் தன்மைகள், நாட்டுத் தலைவர்களையுமம பலவகைகளில் பாதிக்கும் ஆதலின் இந்த ‘அஷ்டோத்திர மாலா ஜோதி” மூலம் தக்க நிவர்த்திகளைப் பெற்றிட, குடும்பத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள் ஆண்டு தோறும் குறைந்தது ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து அருணாசல ஜோதி தரிசனம் பெற்றிடல் வேண்டும். ஜோதியில் இருந்து தோன்றுவதே ஜோதிடக் கலை! எனவே, அனைத்து ஜோதிடர்களும் அருணாசல தீபத்தன்று கட்டாயமாக ஜோதி தரிசனம் பெற்றாக வேண்டும். பூவுலகின் அனைத்துத் துறையினரும் - விவசாயிகள், தொழிலாளர்கள், முதலாளிகள், பாமரர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள் - போன்று அனைவருக்கும் தேவையான அனைத்து வகை தரிசனப் பலாபலன்களையும் அருள வல்லதே அருணாசல தீபமாகும்.
அஷ்டோத்திர மாலா ஜோதி என்கின்ற கார்த்திகை தீப ஜோதியில், 108 வகையான அனுக்கிரக ஜோதிகள் உண்டு. வென்றவர் தோற்கவும், தோற்றவர் வெல்லவும், கற்றவர் ஏற்கவும், கல்லாதவர் உணரவும் - இவ்வாறாக ஒவ்வொருவருக்கும் தேவையான நல்வர அனுக்ரஹ சக்திகளைத் தருவதே "சாயா சாலேஷு அருணாசல ஜோதி."\ தோல்வி என்பதும் வாழ்வில் அடைய வேண்டிய ஒன்றே! ஒருவர் வென்று, மற்றொருவர் ஜெயித்தல் உலக நியதி. ஆனால் ஆன்ம ஜோதிப் பாடத்தில், தீவினைகள் தோற்று, உள்ளம் சீர்மை பெறுதல் மிகவும் முக்கியமானதாகும். தோல்வியில் மானுடம் சீர் பெறுதல் நிகழுமாயின் சீர்திருத்தப் பாடமாக அது ஏற்புடையதுதானே! எனவே, அருணாசல தீப தரிசனப் பலாபலன்கள், ஒவ்வொருவருடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உறைந்து உணர்விப்பதாகும்.